இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து பலமான தமிழ் தேசிய கூட்டமைப்பாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயக்கம் கோவிந்தம் கருணாகரன் இதனை தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசு கட்சி தனித்து செல்வதாக இருந்தால், தனித்து செல்லலாம். ஆனால் கூட்டமைப்பிலுள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழ் அரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை. நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடுவோம்.
தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், இரா.சம்பந்தனிற்கு ரெலோ, புளொட் கட்சிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமாக கூட்டாக உருவாக்கி போட்டியிடுவோம்.
வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் உள்ள மக்கள், தமிழ் தேசிய பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒரு அணியில் திரள வேண்டுமென வலியுறுத்தியதற்காக மட்டுமல்ல, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவோம்.
தமிழ் கட்சிகளை ஒன்றுசேர்க்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது ரெலோவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்றார்.