உள்நாட்டில் இரண்டரை மணிநேரத்தில் ரயில் மூலம் கடக்கக் கூடிய தூரங்களுக்கு இடையே நடத்தப்படுகின்ற விமான சேவைகளைத் தடைசெய்வதற்கு பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அதிகளவு காபன் மூலம் சூழலை மிக மோசமாகப் பாதிக்கின்ற மனித நடவடிக்கைகளில் ஒன்று விமானப் பறப்புகள்.
காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் ஒரு முயற்சியாக உள்ளூர் விமான சேவைகளைக் கட்டுப்படுத்துமாறு பிரஜைகள் குழு ஒன்று வழங்கிய முன்மொழிவை ஏற்றே அரசு அதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. வார இறுதியில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து எம். பிக்கள் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
ஆயினும் செனற் சபையின் வாக்கெடு ப்புக்கு விடப்பட்ட பிறகே அது சட்டமாக
ஏற்றுக்கொள்ளப்படும்.
ரயில்கள் மூலம் நான்கு மணிநேரத்தில் சென்றடையக் கூடிய தூரங்களுக்கு இடையே நடத்தப்படுகின்ற விமான சேவைகளை நிறுத்துமாறே பிரஜைகள் குழு தனது முன்மொழிவில் கூறியிருந்தது. எனினும் விமானத் தொழில்துறையினரின் எதிர்ப்பை அடுத்து அது இரண்டரை மணி நேர பயணத்தூரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரிஸ், லியோன், நொந்த் (Nantes) , போர்தோ (Bordeaux) போன்ற நகரங்களுக்கு இடையிலான குறுகிய நேர விமான சேவைகள் குறைக்கப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பெரிதும் முடங்கிப் போயுள்ள விமானப்
போக்குவரத்துத் துறையை இந்தப் புதிய சட்டம் மேலும் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
பிரான்ஸின் பருவநிலை தொடர்பான புதிய சட்ட விதிகள் அதன் காபன் வெளியேற்றத்தை 2030 ஆம் ஆண்டில் 40 வீதத்தால் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளன.