27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு; பொதுச்சின்னம்; புதிய கட்சிகள் இணைவு: சம்பந்தன், மாவைக்கு பங்காளிகள் கடிதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்தல், புதிய கட்சிகளை இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இரா.சம்பந்தனிற்கும், மாவை சேனாதிராசாவிற்கும்,  பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனுனும், .த.சித்தார்த்தனும் கடிதமெழுதியுள்ளனர்.

அந்த சடிதத்தின் விபரம் வருமாறு-

கெளரவ இரா. சம்பந்தன் பா.உ
தலைவர்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

திரு. சோ. சேனாதிராஜா
தலைவர்- தமிழ் அரசுக் கட்சி

ஐயா,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான கோரிக்கை

கொடூரமான யுத்தத்துக்கு முகம் கொடுத்து 13 வருடங்கள் கடந்த பின்னரும் ஒரு பலவீனமான அரசியல் சூழ்நிலையை எமது இனம் முகம் கொடுத்து நிற்கிறது. மிகப் பலமான கட்டமைப்பாக திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு காரணங்களால் சிதைவடைந்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் நிலையை எட்டியுள்ளதை நாங்கள் கவலையுடன் அவதானிக்கிறோம்.

தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் ரீதியாக செயலாற்றும் தரப்பினருடன் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு ஒரு பலமான அரசியல் சக்தியாக திகழ வேண்டும் என்ற நோக்கோடு கடந்த காலங்களில் நாம் எடுத்து வந்த முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் ஊட்டி உள்ளன.

உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவைக்கு நாங்கள் அனுப்பி வைத்த கடிதங்கள், பிராந்திய வல்லரசான இந்தியாவை நோக்கி நாம் எழுதிய கடிதம், அதற்குப் பின்னரும் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்காக ஒருமித்த நிலையில் நாம் செயலாற்றி வந்தமை, ஜனாதிபதித் தேர்தலிலே ஒருமித்த கோரிக்கையை அனைத்து வேட்பாளர்களிடமும் முன்வைத்தமை, அண்மையில் சர்வ கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று கூடி பல விடயங்களை ஆராய்ந்து ஒருமித்த குரலில் அரச தரப்பிடம் கோரிக்கைகளை முன்வைத்தமை எனப் பலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும்.

இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியானது மீண்டும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்து தரப்பினரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கி அது ஒரு பலமான கட்டமைப்பாக தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அரசியல் விடயங்களைக் கையாளும் அரசியல் இயக்கமாக மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடமும் தமிழ் மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது.

இருப்பினும் அண்மையில் வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளும் அதேபோன்று கிளிநொச்சியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள விளம்பரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய ஒற்றுமையை குழப்புவதான சந்தேகத்தை எமது கட்சிகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் மாறுபட்ட அறிக்கைகள் மேலும் அவற்றை உறுதி செய்திருக்கின்றன. தேர்தல் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

அனைத்து தமிழ்த் தேசியத் தரப்பினரையும் உள்வாங்கி ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்கிறோம். அதுவே எம்மக்களது பாரிய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் என்பதையும் நாங்கள் தெளிவாக அறிந்துள்ளோம். இந்தக் கட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பதற்கும் வலுவான பலமான இயக்கமாக தொடர்வதற்கும், நன்கு ஆய்வு செய்து, நாங்கள் பின்வரும் ஆலோசனைகளை, நாம் ஒன்றிணைந்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைத் தங்கள் முன் வைக்கிறோம்.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் ரீதியாக செயல்படும் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும்
2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவாக நிர்வாக மற்றும் ஸ்தாபன ரீதியாக வரையறுக்கப்பட்டு கட்டியமைக்கப் படல் வேண்டும்
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கெனும் பொதுச் சின்னத்துடன் உத்தியோக பூர்வமாகப் பதியப்பட வேண்டும்

மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில், அங்கத்துவக் கட்சிகளின் தனித்துவம் பேணப் படுவதோடு தனி ஒரு கட்சியின் ஆதிக்கப் போக்குகளும் நெருக்கடிகளும் தவிர்க்கப்பட்டு சுயாதீனமான நிரந்தரமான ஒரு அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும். இந்த விடயம் இன்று நேற்று அல்லாமல் நீண்டகாலக் கோரிக்கையாக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவராலும் மக்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது.

இக் கோரிக்கையை எதிர்கால எமது இன நலன் கருதி நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்பது எங்களுடைய திடமான நம்பிக்கை.
ஆகவே காலத்தின் அவசியத்தைக் கருதி தேர்தல் நலன்கள் கட்சி நலன்களைத் தாண்டி எமது மேற்கூறிய கோரிக்கைகளை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்த தங்களுடைய ஆக்கபூர்வமான பதிலை, அதிக காலம் தாழ்த்தாது, ஒரு வார காலத்துக்குள் வழங்குமாறு அன்புடன் கோரி நிற்கிறோம்.

இப்படிக்கு

 

செல்வம் அடைக்கலநாதன்                  தர்மலிங்கம் சித்தார்த்தன்
தலைவர்-தமிழ் ஈழ விடுதலை             தலைவர்- தமிழீழ மக்கள்
இயக்கம் – ரெலோ                                      விடுதலைக் கழகம் – புளொட்
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

Leave a Comment