25.8 C
Jaffna
December 22, 2024
Pagetamil
விளையாட்டு

பீலே: கால்பந்தின் கடவுளான கதை!

பிரேசில் தேசத்தின் அடையாளம் 1931ஆம் ஆண்டு கார்கோவடோ மலையில் நிறுவப்பட்டு தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின் அந்த சிலையைவிட ஒரு சிறுவன் பிரேசிலின் அடையாளமாக மாறினான். வறுமையை போக்க, ஷூ பொலீஷ் போட்டுக்கொண்டும், வீட்டு வேலை செய்துகொண்டும், டீக்கடையில் வேலை செய்துகொண்டும் இருந்த அந்த சிறுவன் புகழ்மிக்க இயேசு சிலைக்கு சவாலாக, பிரேசில் தேசத்தின் அடையாளமாக உருவெடுத்தது ஒரு சகாப்தம்.

1950ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியிடம் பிரேசில் தோற்றது. பிரேசிலின் ஒரு மூலையில் இருக்கும் கடை ஒன்றில் ரேடியோ கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த டான் டின்ஹோ சொந்த நாட்டின் தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுதார். அருகில் இருந்த அவரின் 9 வயது மகன், “கவலைப்படாதீர்கள் அப்பா… நான் பெரியவனானதும் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை வாங்கித் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.

சரியாக அன்றிலிருந்து எட்டு ஆண்டுகள் முடிய, 1958ல் 6வது உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அன்று தந்தைக்கு சத்தியம் செய்துகொடுத்த மகன் சொன்னபடி பிரேசில் அணிக்காக மஞ்சள் ஜெரிசியை அணிந்துகொண்டு களத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான். சுவீடனை எதிர்கொண்ட அந்த 17 வயது சிறுவன் 55 மற்றும் 89வது நிமிடங்கள் என இரண்டு கோல்கள் அடிக்க பிரேசில் முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டது.

கொடுத்த வாக்குறுதிப்படி தந்தையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் அன்றைக்கு ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து, பிரேசிலின் அடையாளமாக மாறியது கால்பந்து கடவுள் பீலேவே.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் என்று கால்பந்து உலகில் இன்று பல ஹீரோக்கள் கொண்டாடப்படலாம். ஆனால் கடந்த நூற்றாண்டின் கால்பந்து ஹீரோ என்றால் அது பீலே மட்டுமே. கிரிக்கெட்டுக்கு பிரட்மன் என்றால், கால்பந்து உலகின் பிதாமகன் என்றால் பீலேவே.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து சக்ரவர்த்தியான பீலே, கண்காட்சிப் போட்டிகள் உள்ளிட்ட 1,362 முதல்தர போட்டிகளில் அடித்த கோல்களின் எண்ணிக்கை 1,282. கால்பந்து உலகை கோல்மழையால் நனையவைத்த பீலேவைப் போலவே அவரது தந்தை டான் டின்ஹோவும் ஒரு கால்பந்து வீரர்தான். பிரேசில் நாட்டில் பல கிளப்புகளுக்காக ஆடியுள்ள அவர், தனது மகனும் தன்னைப் போலவே ஒரு கால்பந்து வீரனாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்பி, அவருக்கு பயிற்சி கொடுத்தார். ஒரு போட்டியில் ஆடும்போது டின்ஹோவின் கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் வேலைக்குகூட செல்லமுடியாத நிலை வர, பீலேவின் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. தங்கள் குடும்பம் கஷ்டப்படுவதற்கே கால்பந்துதான் காரணம் என்று கருதிய பீலேவின் தாயார், அவர் கால்பந்து ஆடுவதற்கு தடை விதித்தார். ஆனால் அதையும் மீறி தந்தை கொடுத்த உற்சாகத்தால் கால்பந்து விளையாட்டை தொடர்ந்தார் பீலே.

1958இல் நடைபெற்ற 6வது உலகக் கோப்பையை சுவீடன் நடத்தியது. இந்தத் தொடரில்தான் 17 வயதான பீலே அறிமுகமானார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களில் அவர் களமிறக்கப்படவில்லை. லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை பிரேசில் கோல்கள் எதுவுமின்றி சமனிலையில் முடித்தது.

இதையடுத்து மாற்றங்கள் செய்யப்பட்ட அணியில் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. மாறாக நட்சத்திர வீரரான வாவா கோல் அடிக்க உதவி செய்திருந்தார். இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என வெற்றி கண்டிருந்தது.

இதையடுத்து வேல்ஸ் அணிக்கு எதிரான கால் இறுதியில் பீலே கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த கோல் காரணமாகவே பிரேசில் அணி 1-0 என வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதியில் பீலே ஹட்ரிக் கோல் அடித்து சாதனை படைக்க பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் பிரேசில், சுவீடனை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய சுவீடன் 4வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89வது நிமிடங்களில் அவர் கோல் அடிக்க முடிவில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைகளில் ஏந்தியது. இறுதி போட்டி முடிந்ததும் உணர்ச்சி பெருக்கில் பீலே தனது சீனியர் வீரர்களை அரவணைத்தப்படி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பிரேசில் அணிக்காக கடைசி 4 போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்ததுடன் பிரேசில் அணி சம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்குவகித்தார். இந்தத் தொடரில் இருந்துதான் கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக பீலே உருவெடுத்தார். அடுத்த இரு தசாப்தங்களாக உலகளாவிய ரசிகர்களை தனது கால்களின் வித்தையால் மெய்மறக்கச் செய்த வேளையில் அனைவரையும் கவர்ந்திழுக்கவும் செய்தார்.

சுவீடனில் நடந்த உலகக் கோப்பையில் பிரான்சின் ஜஸ்ட் பான்டெய்ன் அடித்த 13 கோல்களையும் விடவும் பீலே அடித்த 6 கோல்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. பீலே அறிமுகமான தொடரில் பிரேசில் அணியில் காரின்சா, வாவா, டிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தனர். எனினும் 17 வயது சிறுவனான தன் மீது அணி நிர்வாகம் கொண்ட நம்பிக்கையை பீலே, நீர்த்து போகச்செய்யவில்லை.

1958, 1962 மற்றும் 1970 ஆண்டுகளில் பிரேசிலுக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்தார் பீலே. உலகக் கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்காக அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 12. பீலே பிரேசிலுக்கான கடைசிக் கால்பந்து போட்டியில் விளையாடி அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. இன்றைக்கும் பிரேசிலைத் தாண்டியும் கால்பந்து ரசிகர்களின் கடவுள் அவர்தான்.

1971ஆம் ஆண்டு பிரேசிலிற்காக கடைசி ஆட்டத்தில் விளையாடினார். 1974 வரை கிளப் அணியில் ஆடி, கால்பந்திற்கு விடை கொடுத்தார்.

கால்பந்து உலகின் ‘கறுப்பு முத்து’ பீலே புற்றுநோய் பாதிப்பால் 82 வயதில் மரணமடைந்துள்ளார். அவரின் உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் சுவாசத்திலும் பீலேவின் பெயர் கலந்திருந்தது. பீலேவின் சுவாசம் நின்றாலும் கால்பந்து ஒவ்வொரு ரசிகனின் சுவாசத்திலும் அவர் நிறைந்திருப்பார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

Leave a Comment