30.6 C
Jaffna
April 12, 2025
Pagetamil
உலகம்

அரசை விமர்சித்த வீராங்கனைக்கு 12 வருட சிறைத்தண்டனை!

பெலாரஸின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தடைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்ததற்காக முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை அலியாக்சாண்ட்ரா ஹெராசிமேனியா மற்றும் அரசியல் ஆர்வலர் அலெக்சாண்டர் ஓபிகின் ஆகியோருக்கு மின்ஸ்க் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

அலியாக்சாண்ட்ரா ஹெராசிமேனியா (36) 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 உலக தடகள சம்பியன்ஷிப்பில் தங்கமும் வென்றார்.

“பெலாரஸ், தனிநபர்கள் மற்றும் குடியரசின் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் (தடைகள்) உட்பட, பெலாரஸின் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்களைச் செய்வதற்கான பொது அழைப்புகளில் அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர்” என்று அரச செய்தி நிறுவனம் BelTA திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

“அத்தகைய செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.”

அரசியல் எதிரிகள், சிவில் சமூகம் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைக்காக பெலாரஸ் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கூற்றுப்படி, பெலாரஸில் 1,300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர்.

எனினும், ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டினால் குறிவைக்கப்படுவதாக குறிப்பிட்டு, குற்றச்சாட்டுக்களை பெலாரஸ் நிராகரித்து வருகிறது.

ஓகஸ்ட் 2020 இல் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தேர்தல் வெற்றி மோசடியானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தின இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அடக்கப்பட்டன. இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  பெலாரஸை விட்டு வெளியேறிய விளையாட்டு வீரர்களில் ஹெராசிமேனியாவும் ஒருவர். இப்போது லிதுவேனியாவில் வசிக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் நெருங்கிய கூட்டாளியான லுகாஷென்கோ, எந்த தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கையில் பெலாரஸ் உத்தியோகபூர்வமாக பங்கேற்கவில்லை என்றாலும், ரஷ்யா தனது பல முனை தாக்குதல்களை நடத்த பெலாரஷ்ய பிரதேசத்தை பயன்படுத்தியது.

லுகாஷென்கோவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு அடக்குமுறைகளை எதிர்கொண்ட விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட பெலாரஷ்ய விளையாட்டு ஒற்றுமை அறக்கட்டளையின் தலைவர் அலெக்சாண்டர் ஓபிகின் ஆவார். ஹெராசிமேனியாவுடன் இணைந்து அதனை நிறுவினார். அந்த அமைப்பு பெலாரஸிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது.

“ஓகஸ்ட், 2020 முதல் மே 20, 2022 வரை, ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம், பெலாரஸ் பிரதேசத்தில் நடந்த நிகழ்வுகள், 2020 தேர்தல் பிரச்சாரத்தின் போக்கு மற்றும் முடிவுகள் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களையும் புனைகதைகளையும் பரப்பினர்,” என அவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

ஹெராசிமேனியாவின் தொடர்மாடி, அவரது கார் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள 48,700 டொலர் ஆகியவற்றை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!