சுருக்கு மடி வலையை வைத்து மீன் பிடிப்பது தவறு கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் ‘சுருக்கு மடி வலை’ கொண்டு மீனவர்கள், மீன்பிடிக்க தடை விதித்து கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்கலாம் என கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, சுருக்குமடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடிவுசெய்து தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்துவதில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், மீனவர்கள் நலன் கருதி மீன்பிடி தொழிலை முறைப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஞானசேகரம் என்பவர் தனி மனுவாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை விதித்துள்ளது என்பது சட்ட விரோதம். குறிப்பாக கடலில் 12 நாட்டிக்கல் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க அனுமதி உள்ளது. அவ்வாறு சென்று மீன் பிடித்தாலும் அவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாகவும், வலைகளை பறிமுதல் செய்யப்படுவதாகவும், அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும், இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனவும், அதனால் சுருக்கு மடிப்பு வலைக்கான தடையை ரத்துசெய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தமிழக மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை அனுமதிக்கலாமா? என்பது தொட்ரபாக ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைத்துள்ளதாக நீதிபதி முன்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி, மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு விரிவாக ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தவறில்லை. அதற்கு தடை விதிப்பது என்பது இயற்கைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீன்பிடி தடை காலம் இல்லாத சமயத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் படகின் அளவு, என்ஜின் திறன் அளவு, உள்ளிட்டவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்து சில வழிமுறைகளை வகுக்கலாம். மேலும், சுருக்குமடி வலை பயன்படுத்தியதால் கடல் வளம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதே வேளையில், சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது தொடர்பாக மிக ஆழ்ந்த ஆய்வும் நடத்தப்பட வேண்டியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.