ரி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது சிம்பாப்வே. இது பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகரமான தோல்வியாக அமைந்துள்ளது.
பெர்த் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த த்ரில் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற சிம்பாப்வே துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான கப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரிஸ்வான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஹைதர் அலி, ஷான் மசூத், முகமது நவாஸ், அஃப்ரிடி ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தனர். இதில் ஷான் மசூத், 38 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். நவாஸ், 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது அந்த அணி.
அதன் மூலம் சிம்பாப்வே 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணியின் மிடில் ஓர்டர் பேட்டிங் யூனிட் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. அந்த அணி சூப்பர் 12 சுற்றில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. முன்னதாக, இந்திய அணிக்கு எதிராக முதல் போட்டியில் அந்த அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராட் எவன்ஸ் வீசினார். களத்தில் பாகிஸ்தானுக்காக பின்வரிசை வீரர்களான முகமது நவாஸ் மற்றும் முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் இருந்தனர். ஆறு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினால் வெற்றி பெறும் நிலை.
முதல் மூன்று பந்துகளில் 3, 4, 1 என 8 ரன்கள் எடுக்கப்பட்டது. அந்த ஓவரின் நான்காவது பந்தை நவாஸ் எதிர்கொண்டார். அந்த பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் நவாஸ் அவுட். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. அஃப்ரிடி 1 ரன் எடுத்து, அடுத்த ஓட்டத்திற்கு முயன்றபோது ரன் அவுட்டானார். சிம்பாப்வே வென்றது!