பெற்றோர்கள் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்ததால் அநாதரவாக மகன், பிறிதொரு தம்பதியிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மிக மோசமான சித்திரவதைக்குள் வளர்ந்த துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உடல் முழுவதும் காயங்களுடன் காணப்பட்ட அந்த மாணவன், வளர்ப்பு பெற்றோரின் கொடுமையிலிருந்து தன்னை காப்பாற்றும் படி கதறி அழுதுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்ததையடுத்து, கிரிபத்கொட பொலிஸார் மற்றும் களனி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், பேலியகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் என்பன இணைந்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது 15 வயதாகும் சிறுவன், கடந்த 4 வருடங்களாக கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு ஆதாரமாக தலை முதல் கால் வரை காயங்கள் காணப்படுவதாகவும், மாணவனின் மன மற்றும் உடல் சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறிக்கைகளின்படி சந்தேகநபர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேலியகொட பொலிசார் தெரிவித்தனர்.
தற்போது 15 வயதாகும் இந்த மாணவனின் பெற்றோர் பல வருடங்களின் முன்னர் வெவ்வேறு திருமணம் செய்துள்ளனர். இதனால் சிறுவன் நிர்க்கதியானார். தந்தை, மகனை தன்னுடன் கொண்டு செல்ல தயாராக இருக்கவில்லை. தாயார் ஆரம்பத்தின் மகனை தன்னுடன் வைத்திருந்த போதும், அவரது இரண்டாவது கணவர் அதை ஏற்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் சச்சரவு ஏற்பட ஆரம்பித்தது.
இரண்டாவது திருமணத்தையும் முறிக்க விரும்பாத தாயார், மகனை பிறிதொரு இடத்தில் தங்க வைக்க முயற்சித்தார்.
இதன்படி, அப்போது ஆறாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த மகன், திஸ்ஸமஹாராமவில் வசிக்கும் பாட்டியின் (தாயின் தாய்) பராமரிப்பில் வைக்கப்பட்டார். மகனின் பராமரிப்பிற்காக மாதாந்தம் தந்தை ரூ.4500 கொடுத்து வந்தார்.
சில காலத்தின் பின்னர், தந்தை பணம் செலுத்துவதை சிறிது காலம் நிறுத்தியதையடுத்து, பாட்டியினால் சிறுவனை வளர்க்க முடியாமல் போனது.
இதையடுத்து, தாயார் தனது மகனை குழந்தையில்லாத தம்பதியொன்றிடம் வளர்ப்பதற்காக ஒப்படைத்துள்ளார். களனி ஹுனுபிட்டிய திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியின் கோரிக்கையின் பேரிலேயே குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அப்போது சிறுவனிற்கு 11 வயது.
வளர்ப்பு பெற்றோரின் வீட்டிலிருந்த மாணவன், களனி தலுகம புனித பிரான்சிஸ் கல்லூரியில் இணைக்கப்பட்டார்.
கடந்த சில காலங்களாக மாணவன் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. கற்றல் செயற்பாட்டிலும் பின்தங்கியிருந்தார்.
மாணவன் கடந்த வாரம் பல நாட்களாக பாடசாலைக்கு வரவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வந்திருந்தார். மாணவனின் கன்னங்கள் மற்றும் மூக்கில் காயங்கள் இருப்பதைக் கண்ட வகுப்பு ஆசிரியை, அவரிடம் இதுபற்றி விசாரித்தபோது, மாணவன் நேரடியாகப் பதிலளிக்காமல், ‘குளியலறையில் விழுந்துவிட்டேன்’ என்று கூறினார்.
ஆனால் இதனை ஆசிரியர் நம்பவில்லை. முகம், கன்னங்கள், மூக்கு என்பன தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதியாக நம்பினார். இது குறித்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து, அதிபரும், ஆசிரியையும் மாணவனை அழைத்து, தகவல் கேட்ட போது, நான்கு வருடங்களாக தான் அனுபவித்த பாரிய சித்திரவதைகள் அனைத்தையும் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட அதிபர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கினார்.
வீட்டில் தூக்கமில்லையென்றும், சிறிது நேரம் தூங்கப் போவதாகவும் குறிப்பிட்டு மாணவன் பாடசாலையில் தூங்கியுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கிரிபத்கொட பொலிஸ் மற்றும் பேலியகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்களுடன் உடனடியாக பாடசாலைக்கு வந்ததையடுத்து, மாணவனிடம் தூக்கத்திலிருந்து எழுந்து, இதுவரை தான் சந்தித்த கொடுமைகள் அனைத்தையும் அந்த மாணவன் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
“சித்தி எப்பவுமே சும்மா அடிப்பார். அந்த வீட்டில் உள்ள அனைவரின் அழுக்கு உடைகளையும் நானே துவைக்க வேண்டும். உள்ளாடைகளைக் கூட நான் துவைப்பேன்.
அவர்கள் டிவி பார்க்கும் போது நான் அவர்களின் கால்களை மசாஜ் செய்ய வேண்டும்.
ஆடைகளை துவைத்தல், ஷூ பொலிஷ், வீடு, முற்றம் சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவ வேண்டும். நான் அதிகாலையில் எழுந்து இதைச் செய்யாவிட்டால், அத்தை என்னை பெரிய எஸ்லான் குழாய்களால் அடிப்பார். என் உடல் முழுவதும் காயங்கள் உள்ளன.
சித்திரவதைகளால் நான் அழுதால், தம்மை தொந்தரவு செய்யாமல் எங்காவது போய் செத்துத் தொலை என்று என் அத்தை எப்போதும் திட்டுவார். என் முதுகு முழுவதும், என் கைகள் மற்றும் கால்கள் வலிக்கிறது.
சித்தியும், சித்தப்பாவும் உணவுப் பார்சல் பொதி செய்து விநியோகிக்கிறார்கள். நானே அவற்றையும் பொதி செய்ய வேண்டும்.
நான்கு நாட்களுக்கு முன்பு, என் அத்தை என் மூக்கை இறுக்கமாக கிள்ளினார். நான் மிகவும் காயப்பட்டேன். மூக்கு வலியால் மூன்று நாட்களாக முகத்தைக் கழுவக்கூட முடியவில்லை. மூன்று நாட்களாக பாடசாலைக்கு வர அனுமதிக்கப்படவில்லை.
இன்று நான் வந்தபோது, என் முகத்தில் உள்ள தழும்புகளை பற்றி பாடசாலையில் யாரேனும் விசாரித்தால், குளியலறையில் விழுந்து காயம் அடைந்தேன் என்று கூறும்படி சித்தி கூறினார்.
சித்தி, சித்தப்பாவின் தாக்குதல்களால் எனது கைகள் மற்றும் கால்கள் அனைத்தும் காயமடைந்துள்ளன.
தயவு செய்து என்னை சித்தியிடம் இருந்து காப்பாற்றுங்கள்” என அழுது கொண்டே குறிப்பிட்டுள்ளார்.
தத்தெடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் kகனை இப்படி அடிப்பது பெற்ற தாய்க்கும் தெரிந்திருந்தது.
அண்மையில், மாணவனின் பாடசாலை வருகை மோசமாக இருந்ததால், மாணவனை பொறுப்பேற்குமாறு அதிபர் அறிவுறுத்தினார், ஆனால் உயிரியல் தாய் அதைப் பொருட்படுத்தவில்லை.