இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அழகிய பெண் ஒருவரின் அழைப்பை நம்பிச்சென்ற தொழிலதிபரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகைகளைப் பறித்த 6 பேர் கொண்ட ஹனி ட்ரப் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..
இருவரும் இன்ஸ்டாவில் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்த பெண் கணவர் கோகுல் துபாயில் இருப்பதாகவும், தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்..
அதை நம்பிய தொழிலதிபர், பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 5பேர் கும்பல் தொழில் அதிபரை தாக்கி ஆபாச வீடியோ, மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளனர்.
தங்களுக்கு பணம் தராவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டிய அந்த கும்பல், கழுத்தில் கிடந்த 4சவரன் தங்க செயின் , செல்போன் , ஏடிஎம் கார்டு ,கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஆவணங்களையும் பறித்துள்ளனர்.
மேலும் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியதால், வீட்டிற்குச் சென்றால்தான் பணம் கொடுக்க முடியும் என தொழிலதிபர் கூறியுள்ளார். இதை அடுத்து அவரை காரில் ஏற்றி அந்த கும்பல் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்ற போது வழியில் தொழிலதிபர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.
பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்ற தொழிலதிபர் நடந்த விவரங்களை விரிவாக கூறியுள்ளார். போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்டா பிரபலம் கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு உள்பட 6 பேரை கைது செய்தனர்.
எர்ணாகுளம் காக்கநாடு சீபோர்ட் ஏர்போர்ட் ரோட்டைச் சேர்ந்த தேவு (24), அவரது கணவர் கண்ணூரைச் சேர்ந்த கோகுல் தீப் (29), கோட்டயம் பாலா ராமாபுரத்தைச் சேர்ந்த சரத் (24), அஜித் (20), வினய் (24), ஜிஷ்ணு (20) ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.
பொலிஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சரத் என்ற இளைஞனே இந்த சம்பவத்தின் சூத்திரதாரி. அவரே, தொழிலதிபரை இன்ஸ்டகிராமில் தொடர்பு கொண்டார். பெண்ணைப் போல அவர் பேசி ஏமாற்றினார். தன் கணவன் வளைகுடாவில் இருப்பதாகவும், நோய்வாய்ப்பட்ட தாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொழிலதிபர் அந்த போலிப் பெண்ணை சந்திக்க விரும்புவதாக கூறியதும், தேவுவையும் கோகுல் தீப்பையும் வாடகைக்கு அமர்த்தினார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக செயற்படும் தேவு மற்றும் கோகுல் தீப் ஆகியோருக்கு 50,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ஒப்பந்தத்தின்படி, தேவு அந்த தொழிலதிபருக்கு குரல் செய்திகளை அனுப்பினார். அரட்டை அடிக்கும் போது சரத் தனது வீடு பாலக்காட்டில் இருப்பதாகச் சொன்னான். எனவே ஆன்லைன் மூலம் யக்கரையில் வாடகைக்கு வீடு எடுத்தார். குறித்த வர்த்தகர் யக்கரையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் என மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
அந்த கும்பல் சொல்லும் இடத்துக்கு வர்த்தகரை அழைத்துச் சென்றால் ரூ.40,000 கமிஷன் கிடைக்கும் என்று தேவு, கணவர் கோகுல்தீப் ஆகியோர் பொலிசாரிடம் தெரிவித்தனர்.