அழகிப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக மேக் அப் இல்லாமல் பெண் ஒருவர் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிகழ்வு இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரைச் சேர்ந்தவர் மெலிசா ராப் (20). இவர் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராகி உள்ளார். இந்தச் செய்தியில் என்ன புதிது இருக்கிறது என்று கேட்கலாம். மெலிசா இந்த அழகிப் போட்டியில் ஒப்பனை இல்லாமல் பங்கெடுத்திருக்கிறார். இதுவரை இப்போட்டியில் தான் சந்தித்த அனைத்து சுற்றுகளிலும் மெலிசா ஒப்பனை இல்லாமல்தான் பங்கெடுத்துள்ளார். இதுவே, அவரை தனித்துவமாகியுள்ளது.
மேலும், அழகிப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக மேக் அப் இல்லாமல் இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டிக்கான இறுதி முடிவு அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், தனது தனித்துவத்தால் மெலிசா உலகம் முழுவதும் வைரலாகி வருகிறார். ஒப்பனை இல்லாமல் அழகிப் போட்டியில் கலந்து கொள்வது குறித்து மெலிசா கூறும்போது, “நான் அக அழகை வெளிப்படுத்த விரும்புகிறேன். வெவ்வேறு வயதுடைய பல பெண்கள் மேக்கப் செய்து கொள்வதை நான் பார்க்கிறேன். ஏனெனில், அவர்கள் அவ்வாறு செய்ய அழுத்தத்துக்கு உட்படுகிறார்கள். நாம் சொந்த நிறம், தோல் குறித்து உண்மையில் மகிழ்ச்சி கொள்வோம் என்றால் ஒப்பனை செய்து கொள்ளத் தேவையில்லை. நம்மிடம் உள்ள குறைகளே நாம் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன. அதுவே தனித்துவமானது.
நானும் சிறுவயதில் மேக்கப் செய்து கொண்டேன். ஆனால், தற்போது நான் எனது முகத்தையும், தோலையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதன் காரணமாகவே நான் இப்போட்டியில் மேக்கப் செய்து கொள்ளவில்லை. இதுதான் நான். நான் என்னை வெளிக்காட்டி கொள்வதில் அச்சம் கொள்ளவில்லை” என்றார்.
மெலிசாவின் முடிவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.