சரித்திரப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று 24 ஆம் திகதி, புதன்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள் புடைசூழ சித்திரத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பரிபாலகர்களான மாப்பாண முதலியார் பரம்பரையில் மூன்றாம் இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் ஆலயத்துக்கான முதலாவது தேர் உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் இரண்டாம் ஆறுமுக மாப்பாண முதலியார் தங்க ஆபரணங்கள் மற்றும் வெள்ளி சிங்காசனம் ஆகியவற்றின் மூலம்,தேர் அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் சண்முகப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டதுடன், சண்முகரே தேரில் ஏறி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும் தொடங்கினார்.
நல்லூரில் பாவனையில் இருந்த தேர் பழுதடைந்த நிலையில் சண்முகதாஸ் மாப்பாண முதலியார், புதிய தேர் ஒன்றை 1964 ஆம் ஆண்டு உருவாக்கிதிருப்பணி நிறைவேற்றினார். அந்தத் தேரே மீண்டும் புனருத்தாரணத் திருப்பணி நிறைவுற்று இன்று (24) புதன்கிழமை வெள்ளோட்டம் கண்டது.






