கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகே, குணதிலக்க சிறிவர்தனலாகே ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரங்களுக்கு அமைய தடுப்புக் காவலில் வைக்குமாறு புலனாய்வு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவரும் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.