திருகோணமலை, நிலாவெளியில் போக்குவரத்து பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிலாவெளி, அடம்பொட வெட்டை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவரை போக்குவரத்து பொலிசார் வழிமறித்ததை தொடர்ந்து இந்த சர்ச்சை சம்பவம் நடந்தது.
பொலிசார் இளைஞனை தாக்கிய பின்னரே, பொலிசாரை சுற்றிவளைத்ததாக பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சீருடையில் இருக்கும் ஒரு காவல்துறை உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மானதுங்க கூறுகையில், ஒரு குழு காவல்துறை அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது.
நேற்று (மார்ச் 31) திருகோணமலை நிலாவெளி பகுதியில் போக்குவரத்து சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.
“10 பேர் கொண்ட குழு காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து பின்னர் அவர்களைத் தாக்கிர். காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று அவர் கூறினார்.
சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று எஸ்.எஸ்.பி புத்திக மானதுங்க கூறினார்.
மற்ற சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டாலும், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசாரணைகள் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.