சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல். தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மும்பை – நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஓவரும் காரில் இருந்துள்ளார். விபத்தில் சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரி படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 24-ம் தேதி இரவு இந்த விபத்து நடைபெற்றதாக தகவல். தற்போது நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சோனாலி சூட் மற்றும் அவரது சகோதரியின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் பலத்த காயங்கள் காரணமாக அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடலில் உள் காயங்கள் எதுவும் இல்லை. விபத்தில் சிக்கிய சோனாலி சூட் உறவினர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
‘என் மனைவி நலமாக உள்ளார். இந்த விபத்தில் இருந்து அவர் தப்பியது அதிர்ஷ்டவசமானது. ஓம் சாய் ராம்’ என தனியார் செய்தி நிறுவனத்திடம் சோனு சூட் தெரிவித்துள்ளார். சோனாலி சூட் பயணித்த கார், சாலையில் எதிர்புறம் வந்த டிரக் மீது நேருக்கு நேர் மோதியதாக தகவல்.
நடிகர் சோனு சூட், கரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.