யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதிக் கொண்டதால் பெரும் அமளி துமளியால் குழப்பம் ஏற்பட்டு கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
இக் கூட்டம் ஆரம்பம் முதலே தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோருக்கும் சுயேட்சைகுழு எம்பி அர்ச்சுனாக்கும்ம் இடையே தொடர்ந்தும் வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்த்து.
ஒரு கட்டத்தில் இந்த வாக்கு வாதங்கள் முற்றி இளங்குமரனுக்கும் அர்ச்சுனாக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு இருவரும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களால் முரண்பட்டுக் கொண்டனர். அதேநேரத்தில் பரஸ்பர குற்றச்சாட்டுக்களால் கூட்டத்தில் சிரிப்பொழியும் ஏற்பட்டது.
இவ்வாறாக இந்த இரு எம்பிக்களும் முரண்பட்ட நிலையில் கூட்டத்தின் தலைவரான அமைச்சர் சந்திரசேகரன் இருவரையும் அமைதியாக இருக்குமாறு பல தடவைகள் கோரிய போதிலும் இருவரும் தொடர்ந்தும் அநாகரிகமான முறையில் வசைபாடிக் கொண்டே இருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சந்திரசேகரன் அடேய் அடேய் என ஒருமையில் விளித்த போதும் இந்த எம்பிக்கள் மாறி மாறி வார்த்தைகளால் முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து இருவரதும் ஒலி வாங்கிளை நிறுத்துமாறு அமைச்சர் கூறியதன் அடிப்படையில் சில நிமிடங்கள் ஒலி வாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும் அவர்கள் தமது சண்டையை நிறுத்தவில்லை.
இவ்வாறாக அவர்கள் தொடர்ந்தும் அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களை அள்ளிவீசி முரண்பட்டு வந்தனர். இதற்கிடையே சிறிது நேரம் அமைதியின் பின்னர் கூட்டம் மீள ஆரம்பித்தாலும் தொடர்ந்தும் இருவரும் முரண்பட தொடங்கினர்.
இதனையடுத்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டி இருந்தும் அந்த விடயங்கள் கூட்டத்தில் கலந்தாது ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்கப்படாமல் கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை கூட்டத்தில் அரச அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடாத்துவதாகவும் கூட்டத்தின் தலைவர் இவர்களைக் கட்டுப்படுத்த தவறுவதாகவும் குறிப்பிட்ட சிறிதரன் எம்பி இந்தக் கூட்டத்தில் இருப்பதில் பயனில்லை என்று அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.
இன்றைய கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பொலிஸார் இரானுவத்தினர் எனப் பலரும் வழமை போல வந்திருந்த போதும் குறித்த இரு எம்பிக்களின் அநாகரிகமான செயற்பாட்டினைப் பார்த்து முகம் சுழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.