யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் பொலிசார் நுழைந்து, பெண்களை காலால் உதைந்து தாக்குவதாக குறிப்பிட்டு, மிகச்சிறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
எனினும், சமூக ஊடகங்களில் குறிப்பிடப்படுவதை போன்றோ, இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிடுவதை போலவோ அங்கு பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சம்பவத்தை திரித்து, பொலிசாரின் கைது நடவடிக்கையிலிருந்து குற்றவாளியை பாதுகாப்பதற்காக பெண்கள் ஆடிய நாடகமே அந்த சம்பவமாகும்.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை திரட்டியுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் இன்று (24) இந்த சம்பவம் நடந்தது.
அந்த பகுதியை சேர்ந்த அஜந்தன் என்பவர், சட்டவிரோதமாக மாடு வெட்டும் தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக குளிரூட்டப்பட்ட வாகனமொன்றை பயன்படுத்துவதாகவும் பொலிசாருக்கு நீண்டகாலமாக தகவல் கிடைத்து வந்துள்ளது.
இன்று அவரது வீட்டில் சட்டவிரோதமாக மாடு வெட்டப்படும் தகவல் கிடைத்ததும், நெல்லியடி பொலிசார் சிலர் அவரது வீட்டுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மாட்டின் இறைச்சி மீட்கப்பட்டது. எனினும், சந்தேகநபர் தப்பியோடி, தனது வீட்டுக்குள் நுழைந்து, அறைக்கதவை தாளிட்டு விட்டார்.
அறைக்கதவை திறக்குமாறு பொலிசார் கூறிய போதும், அவர் கதவை திறக்கவில்லை. குற்றப்பிரதேசங்களிற்கே உரிய இயல்புகளிலொன்று, சம்பவ இடத்தில் பெண்கள் திரண்டு, கைக்குழந்தைகளை பணயம் வைத்து, பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறு விளைவிப்பதாகும்.
துன்னாலையிலும் இன்று அதுதான் நடந்தது.
சந்தேகநபரின் மனைவியும், மற்றொரு பெண்ணும், பொலிசார் அறைக்கதவை திறக்க முடியாதபடி வழிமறித்து நின்றனர். அயலிலுள்ள மேலும் சில பெண்களும் திரண்டு, பொலிசார் அறைக்கதவை திறக்க முடியாதபடி வழிமறித்துள்ளனர்.
இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு பொலிசார் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு மேலும் ஒரு பொலிஸ் குழு அனுப்பப்பட்ட போதும், அறையை திறக்க விடாமல் பெண்கள் வழிமறித்து நின்றனர்.
இறுதியாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலுமொரு அணி சென்றே, சந்தேகநபரை கைது செய்தனர்.
இதன்போது, அறைக்கதவை திறப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கதவை உதைந்த போது, பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அந்தப் பெண்கள் நாடகமாடினர். அதை வீடியோ எடுத்து, முன்னாலும் பின்னாலும் கத்தரித்து, சம்பவம் சரியாக புலப்படாதபடி- சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். கத்தரிக்கப்படாத முழுமையான வீடியோக்களை தமிழ்பக்கம் தற்போது வெளியிடுகிறது.
மாட்டிறைச்சியுடன் கைதான சந்தேகநபர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர் சட்டவிரோதமாக மாடு வெட்டியதை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ரூ.30,000 தண்டம் விதிக்கப்பட்டது. அவர் தண்டத்தை செலுத்தி வீடு சென்று விட்டார்.
பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றவாளியின் மனைவியும், மற்றொரு பெண்ணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களில் ஒருவர் சிறிய குழந்தையின் தாய் என்பதன் அடிப்படையில் எச்சரிக்கை செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.