மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசு கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாணக்கியன், கடந்த அரசினால் வழங்கப்பட்ட மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்கள் பற்றி வெளிக்கொணர்வதாக தேர்தலி் முன்னர் குறிப்பிட்டாலும், தேர்தல் வெற்றியின் பின்னர் அரசாங்கம் மௌனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க-
“யார் இவர்?. 2012ஆம் ஆண்டு வரை நீலப்படையணியில் பதவியில் இருந்த ஒருவர். 2010ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் ஒருவரால் ராஜபக்சக்களுடன் செல்ல முடியுமா?. கருணா, பிள்ளையானால் மாத்திரமே செல்ல முடியும். பிள்ளையான், கருணா ஆகியோருடன் சென்றவரே அவர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் இழுப்பதற்காக பணம் வழங்கினார். தற்போது பெரிதாக கோசமிட்டுக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு ரணில் விக்கிரமசிங்க 600 மில்லியன் ரூபா வழங்கவில்லையா?. இவர்கள் உண்மையிலேயே மொட்டுக்கட்சிக்கே பொருத்தமானவர்கள். தமிழரசு கட்சியிலுள்ள ராஜபக்ச அவதாரம் அவர். எந்தவொரு தகுதியும் இல்லை“ என்றார்.