மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன் நேற்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை, ரி-56 ரக துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி. கிருஸ்ணரூபன், வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ஜெ.பிரபாகரன், குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்ததையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.