இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழிலுள்ள சபைகளுக்கான வேட்புமனுக்களில் நேற்றைய தினம் 05 சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த செய்திருந்த நிலையில் ஏனைய சபைகளுக்கு இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 17 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கலை சமர்ப்பித்துள்ளதாக அக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வேட்புதனுத் தாக்கலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “பல கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆர்வமுடன் இத்தேர்தலில் பங்கெடுக்கின்றமை தெரிகிறது.
ஆனாலும் இன்று நாட்டின் சூழலைக் கருத்திற்கொண்டு, விசேடமாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்திருக்கும் நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் இருப்பை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் தமது வாக்குப்பலத்தை பிரயோகிக்கும்போது செய்திகளை சொல்வார்கள்.
வடக்கு கிழக்கு மக்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சி இறைமையின் அடிப்படையிலான வாக்குரிமையை உபயோகிக்கும் போது இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்கின்றோம் அதைப் பலமாக எடுத்தியம்புகிறோம் என்கின்ற செய்தியை வெளிப்படுத்த வேண்டும் என வினயமாக வேண்டுகிறது எனத் தெரிவித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அமோகமான ஒரு ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. கட்சிகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குகிறது. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சி உட்பட்ட தமிழ்க் கட்சிகளுக்கு வாக்குகள் குறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம். இதிலிருந்து மீண்டெழுந்து தமிழ்த்தேசம் என்று நாம் அழைக்கின்ற தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி தமது சொத்து என எடுத்தியம்புவதற்கு இத்தேர்தல் ஒரு தலையாய சந்தர்ப்பம் அதனை பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.