இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவரும் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலரும் இவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர். ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
இருவரும் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம், ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.