காரைநகர் பிரதேச சபை தேர்தலில் மான் சின்னம் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றிபெறும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் யாழ்மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி மணிவண்ணனுடன் இணைந்து காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவை கையளித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் காரைநகர் மண்ணை நேசிப்பவர்கள் நிச்சயமாக என்னை நேசிப்பார்கள் நான் தவிசாளராக இருந்த அந்த இறுதி 7 மாதங்களை நினைத்துப்பார்ப்பார்கள்.
அந்த நேரத்தில் நான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டேன். நான் எமது பிரதேச அபிவிருத்திக்காக கொழும்பு வரை சென்று உயர்மட்ட அமைச்சர்களைக் கூட சந்தித்தேன் வெற்றியும் கண்டேன்.
என்னைப் பொறுத்தவரை எமது காரை மண்ணின் அபிவிருத்தியே எனது இலக்கு. இங்கு சின்னங்கள் முக்கியமில்லை. சின்னங்கள் மாறினாலும் எனது எண்ணங்கள் மாறாது. தமிழ் மக்கள் கூட்டணியில் பலமான அணியொன்று இம்முறை களமிறக்கப்பட்டுள்ளது.
காரைநகரில் இம்முறை மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக்கைப்பற்றும் என்பதில் ஐயமில்லை.இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்கள் காரணமாக நான் உட்பட காரைநகர் இலங்கை தமிழரசு கட்சியின் மூலக்கிளை உறுப்பினர்கள் மான் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.மேலும் எந்த கட்சிகளையும் இனி நாம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.
என்னை,எனதுசேவையை, எனது காரைநகருக்கான அர்ப்பணிப்பை மக்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு மான் சின்னத்தில் போட்டியிடும் 6 வட்டார வேட்பாளர்களுக்கும் தமது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என பலமாக நம்புகிறேன் ஆகவே காரைநகரில் மான் பாயும் என தெரிவித்தார்.