26.5 C
Jaffna
March 19, 2025
Pagetamil
ஆன்மிகம்

ரிஷபம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். ரிஷபம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே…

ரிஷபம்: ‘வாக்கே வாழ்வு’ என்ற கூற்றுப்படி எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை: இதுவரை உங்களது தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ராசியையும் , ஏழாம் பார்வையால் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்கள்: இந்த சனிப்பெயர்ச்சியில் தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும். உங்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதை விட மற்றவருக்கு பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் அதை விடுவதே சிறந்தது. உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மையைத் தோற்றுவிப்பார். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி உடல் பொலிவடையும்.

உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்துவீர்கள். சிலர் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கவுரவமும், அந்தஸ்தும் உயரும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சககலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும்.

மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்
பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து ்திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

ரோகிணி: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.

மிருகசிரீஷம் 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: வல்லிபுர பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும். கோளறு திருப்பதிகத்தை அன்றாடம் பாராயணம் செய்வது. தாமரை மலரை பெருமாளுக்கு சாத்திவர பொருளாதார நிலைமை உயரும் | சனி பகவானின் பார்வைகள்:-

-ஜோதிடமணி நல்லை பரமேஸ்வரக்குருக்கள்

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மேஷம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 – 2027 முழுமையாக!

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!