பழம்பெரும் உறுதுணை நடிகை பிந்து கோஷ் காலமானார். அவருக்கு வயது 76.
கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பின் காரணமான உடல்நல பாதிப்புகளாக அவதிப்பட்டு வந்தார் பிந்து கோஷ். அவருக்கு பல்வேறு பிரச்சினைகளால் மருத்துவ செலவுக்கு பணமின்றி சிரமப்பட்டார். இதனை அறிந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கலந்த உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிந்து கோஷ். ரஜினி, கமல், சிவாஜி கணேசன், மோகன், பிரபு, கார்த்திக் என அனைவருடனும் நடித்துள்ளார். இவரது அறிமுக படம் ‘கோழி கூவுது’. ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ உள்ளிட்ட பல படங்கள் இவருடைய நடிப்பில் பிரபலமானவை.
சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். திங்கள்கிழமை இவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.