சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Date:

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நாதக நிர்வாகி மற்றும் போலீஸாரை தாக்கிய காவலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், அடுத்த சில நாட்களில், விஜயலட்சுமி அந்த புகாரைத் திரும்பப் பெற்றார். மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், நடிகை விஜயலட்சுமி, திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (பிப்.27) விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சீமான் தரப்பில், அவரது வழக்கறிஞர்கள் 4 வார கால அவகாசம் கோரியிருந்தனர்.

இதனிடையே, பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்குச் சென்ற வளசரவாக்கம் போலீஸார், சீமான் வீட்டில் நாளை (பிப்.28) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த நாதக நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் என்பவர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்டதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், போலீஸார் ஒட்டிய சம்மனை கிழித்த நபர் நாதக-வைச் சேர்ந்த நிர்வாகி சுதாகர் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே, வீட்டின் காவலாளி ராணுவ வீரர் என்பதால், அவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், போலீஸார் ஒட்டிய சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான், என்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும், போலீஸார் மீண்டும் சம்மனை ஒட்டிக் கொள்ளலாம் என்றும் சீமான் மனைவி கயல்விழி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சீமான் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓசூர் சென்றுள்ள நிலையில், பாலவாக்கத்தில் நடந்த இச்சம்பவம் நாதக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்