சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நிறுவ அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்ட விளையாட்டு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான யோசனையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி முன்வைத்ததற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அதிகார சபை, இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்துதல், சமூக பாதிப்புகளை குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த வகையில் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம், ஒரு சுயாதீன ஒழுங்குபடுத்தல் அமைப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும்.
இதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கும் தீர்மானம் 2023 ஜூன் 26ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சட்டமூலத்தைத் துரிதமாகத் தயாரிக்க அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், சமகால அமைச்சரவையின் அனுமதி தேவைப்படுவதாக சட்டவரைஞர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.