கடந்த 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெற்ற 4 நாட்களில் மொத்தம் 8 கொலைகள் பதிவாகியுள்ளன.
இந்த குற்றச் செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆனால், தேசிய பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இல்லையென ஜனாதிபதி கூறியிருப்பது கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுக்குள் நடக்கும் இந்த கொலை கலாசாரம் நாட்டின் சட்டம், ஒழுங்கு, மற்றும் பாதுகாப்பு அமைப்பிற்கு நேரடி சவாலாக மாறியுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் (24) உரையாற்றும் போது தெரிவித்தார்.
அண்மையில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளே இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு முன்பே கிடைத்திருந்த போதிலும், அதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புலனாய்வு பிரிவிற்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு குறைபாடுகளை குறைக்கும் வகையில் திறமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, நாட்டில் இடம்பெறும் அவசரமான பாதுகாப்பு பிரச்சினைகளை சீர்செய்யும் வகையில் அரசாங்கம் உடனடியாக திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தனது உரையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.