ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறித்து, பிரதியமைச்சர் நலின் ஹேவகே மேற்கொண்ட விமர்சனங்களின்போது, அவர் ரோஹினி கவிரத்னவை வேறு ஒரு குடும்பப் பெயருடன் அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக அந்த கருத்தை ஹன்சார்டிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றும் போது, நலின் ஹேவகே, ரோஹினி கவிரத்னவை விமர்சித்ததோடு அவரை வேறு ஒரு குடும்பப் பெயரிலும் அழைத்ததையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பிரதியமைச்சரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அதனை ஹன்சார்டிலிருந்து நீக்குமாறும் கோரியிருந்தார்.
இதன்போது, ரோஹினி கவிரத்ன என்ற பெயரை உடைய வேறொரு நபரையே தான் குறிப்பிட்டதாக நலின் ஹேவகே கூறியதையடுத்து, விவாதம் தீவிரமடைந்தது.
பின்னர், அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பிரதியமைச்சர் சார்பில் மன்னிப்புக் கோரும் வகையில் குறித்த வார்த்தையை ஹன்சார்டிலிருந்து நீக்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.