8வது ஆண்டில் அடியெடுத்து வைத்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் நேற்றைய தினம் (20) கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் நேற்று (20) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
2017ம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட போராட்டம் இப்போது 8வது ஆண்டை முடித்து 9வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், வடக்கு – கிழக்கு முழுவதிலும் இருந்து வருகைதந்த உறவினர்கள், நீதி மற்றும் உண்மையின் வடிவமாக தீச்சட்டியினை ஏந்தியவாறு கிளிநொச்சி டிப்போ சந்திவரை பேரணியாக சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், தங்களால் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை ஒருமுறையாவது காண முடியாமல் 8 ஆண்டுகள் கடந்துவிட்டதாகக் கூறினர். பலர் நெஞ்சில் வேதனை கொண்டே இறந்து போயிருப்பதாகவும், இதுவரை எந்த ஒரு ஆட்சியும் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததில்லை என்றும் போராட்டத்தில் பங்குகொண்டவர்களால் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதோடு, அவர்களின் வாக்குறுதிகளும் மாறிவருகின்றன. ஆனால் காணாமல் போன உறவுகள் எங்கே? என்ன ஆயிற்று? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
உள்நாட்டுச் சட்ட நடைமுறைகளில் நம்பிக்கை இல்லை என காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் வலியுறுத்தினர். இதன் காரணமாக சர்வதேச நீதித்துறை மூலம் நீதி தேட வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் தமது உறவுகளை பற்றிய உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர்கள் அழுத்தம் தெரிவித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளில் எவரும் தமக்கான தீர்வை வழங்கத் தயாராக இல்லை என்பதாலேயே சர்வதேச விசாரணை ஒன்றே நியாயமான நீதியை வழங்கும் என இதன்போது அவர்கள் உறுதியாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



