இன்று (17) 2025ம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் அவர் தலைமையில் சமர்ப்பிக்கப்படும் முதல் வரவு செலவுத் திட்டமான இது, நாட்டின் எதிர்கால பொருளாதார நோக்கங்களை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இன்றைய பாராளுமன்ற அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும். இதனை தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் 2வது வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18ம் திகதி முதல் 25ம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதன்படி, பெப்ரவரி 25ம் திகதி மாலை 6.00 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதனை தொடர்ந்து, ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ம் திகதி முதல் மார்ச் 21ம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறும். இந்த விவாதம் 4 சனிக்கிழமைகளை உள்ளடக்கியதாக இருக்கும். சட்டமூலத்தின் 3வது வாசிப்பு வாக்கெடுப்பு மார்ச் 21ம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கிடையில், வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான இறுதிக் கட்ட வேலைகளுக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை (13.02.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வரவு செலவுத் திட்டம், புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளையும், எதிர்கால திட்டங்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



