மியான்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணைய மோசடி மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 260க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டு, தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கை, இரு நாடுகளின் எல்லையில் மனிதக் கடத்தல் மற்றும் சைபர் மோசடிகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். சீனாவைச் சேர்ந்த நபர்கள், மியன்மார், தாய்லாந்து எல்லைப் பகுதியில் மோசடி மையங்களை நடத்தி, பல வெளிநாட்டவர்களை சட்டவிரோதமாக வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாக அறியப்படுகிறது.
அவர்களில் சிலர் கடத்தப்பட்டவர்களாகவும், மற்றவர்கள் தாங்களாகவே குறித்த வேலைக்கு முன்வந்துள்ளதாகவும், இம் மோசடி மையங்களில் இருந்து மீட்கப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தி, அவர்கள் உரிய நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து எல்லையில் உள்ள மோசடி நிலையங்கள் சீன சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சீனாவைச் சேர்ந்த பலர் தாய்லாந்தை ஆபத்தான நாடு என கூறுகின்றனர்.
குறித்த இச் சம்பவங்கள், இணைய மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தலின் ஆபத்துகளை வலியுறுத்துகின்றன.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட சட்ட ரீதியான பாதுகாப்பான வழிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் பற்றி அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், சட்டவிரோத வேலை வாய்ப்புகளுக்காக வருகை விசாவை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் எனவும் தேசிய மனிதக் கடத்தல் தடுப்பு பணிக்குழு (NAHTTF) அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



