– கருணாகரன்-
“புதிய அரசாங்கத்தோடு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு முன் தயாரிப்பைச் செய்ய வேண்டும். அதற்காகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” என்று சொல்லும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதற்கட்டமாகத் தமிழரசுக் கட்சி, ரெலோ ஆகியவற்றோடு பேச்சுகளைத் தொடங்கியிருக்கிறார். இதற்காகத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிவஞானம் சிறிதரனோடும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனோடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனித்தியாக முதற் சுற்றுப் பேச்சுகளை நடத்தினார்.
கஜேந்திரகுமார் பொன்னலம்பலத்தின் தெரிவு, பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழ்த்தேசியக் கட்சிகளை மையப்படுத்தியதாகவே உள்ளது. என்பதால்தான் அவர் தமிழரசுக் கட்சியோடும் (சிறிதரனோடும்) ரெலோவோடும் (செல்வத்தோடும்) பேசியிருக்கிறார். ஏனைய கட்சிகளைப் பற்றி அவர் பொருட்படுத்தவில்லை.
ஆனால், இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசும்போது பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்க வேண்டியது அவசியமானது. 1980 களில் நடந்த பேச்சுகளில் அனைத்துத் தரப்பும் பங்கேற்றிருந்ததை இங்கே சுட்டிக் காட்டலாம். இந்திய அரசின் அனுசரணையோடு அல்லது மத்தியஸ்தத்தோடு நடந்த பேச்சுகளில் அப்போதிருந்த விடுதலை இயக்கங்களான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலொ, விடுதலைப்புலிகளோடு, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பேச்சுகளில் பங்கேற்றது. 1989, 1990 களில் பிரேதாசாவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுகளின்போது கூட ஏனைய கட்சிகள் பார்வையாளர்களாக இடம்பெற்றிருந்தன. இதனுடைய அர்த்தம், என்ன நடக்கின்றது என்பதை அனைவரும் அறிவதோடு, இறுதி தீர்மானங்களில் அனைத்துத் தரப்பினருடைய உடன்பாடும் வேண்டும் என்பதாகவே இருந்தது.
2009 க்குப் பிந்திய நிலவரம் இதை இன்னும் அழுத்தமாகவும் விரிவாகவும் உறுதிப்படுத்துகிறது. 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் பலமான இராணுவ அமைப்பாகவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் சில பிரதேசங்களைக் கைப்பற்றி வைத்திருந்த்து என்பதாலும் விடுதலைப் புலிகளோடு பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் 2000 த்தில் ஏற்பட்ட அரசியற் சூழல் மலையக, முஸ்லிம் தரப்புகளையும் இணைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையைப் புலிகளுக்கே உருவாக்கியது. இதனால் பிரபாகரன் ஹக்கீம், பிரபாகரன் – சந்திரசேகரன், ஆறுமுகம் தொண்டமான் சந்திப்புகள் கிளிநொச்சியில் நடந்தன.
மட்டுமல்ல, அடுத்த கட்டமாக தமக்கு எதிர்நிலையில் வைத்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர்விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்றவற்றோடும் புலிகள் உடன்பாடு கொள்ளவேண்டி வந்தது.
இருந்தும் புலிகளால் அரசியல் ரீதியாக வெற்றியடைய முடியவில்லை.
இன்றைய சூழலோ முற்றிலும் மாறானது. 2009 – 2004 வரையும் இருந்ததையும் விட 2025 இனுடைய நிலவரம் வேறு. இப்பொழுது தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கிலும் வெற்றியீட்டியுள்ளது. பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்தோடுள்ளது. தேர்தலுக்குப் பிறகான இன்று வரையான நிலவரம் தேசிய மக்கள் சக்தியின் பக்கமே தமிழ் மக்களும் நிற்பதாக உள்ளது. இதற்கு அண்மைய உதாரணம், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு கிடைத்துள்ள வரவேற்பாகும். அந்தளவு வரவேற்பை இன்று எந்தத் தமிழ்த்தேசியத் தலைவரும் பெற முடியாது.
இந்தச் சூழலில் அரசியற் பேச்சுகளுக்கு தமிழ்த் தரப்புகள் எதையும் அழைக்கும் நிலையில் அரசாங்கம் இல்லை. வேண்டுமானால் அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்வதற்கு மட்டும் அரசாங்கம் முயற்சிக்கலாம். அதுவும் தற்போதைக்கு இல்லை என்று அரச தரப்பு அறிவித்துள்ளது.
இந்த யதார்த்தத்தில், இந்தச் சூழலில்தான் கஜேந்திரகுமாரின் அரசியல் அபிலாஷையையும் அரசியல் நகர்வையும் நோக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கிறதோ இல்லையோ, தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு கஜேந்திரகுமார் முயற்சிக்கிறார். அதாவது சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் முன்னெடுத்து வந்த மென்னிலைத் தேசியவாதத்தைத் தோற்கடித்து, தன்னுடைய தீவிர நிலைத் தேசியவாதத்தை முன்னிறுத்துவதற்கு முயற்சிக்கிறார். இதற்காகத் தன்னோடு ஒத்துப் போகக் கூடிய சிறிதரன் போன்றோரை அணைத்துக் கொள்ள விரும்புகிறார்.
இதற்கு வாய்ப்பாகத் தமிழரசுக் கட்சியில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இல்லாத சூழல் காணப்படுகிறது. கூடவே சுமந்திரனும் தேர்தலில் தோற்றுப்போயிருக்கிறார்.
மறுவளத்தில் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரும் தோல்வியைச் சந்தித்து நிற்கின்றனர். மிஞ்சியிருப்பவர்கள் ரெலோ செல்வமும் தமிழரசுக் கட்சியின் சிறிதரனும்தான். இந்த இருவரையும் எப்படியும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று யோசிக்கிறார் கஜேந்திரகுமார்.
கஜேந்திரகுமாரின் ஆதரவும் அனுசரணையும் சிறிதரனுக்கும் தேவையாகவுள்ளது. பேச்சுகளில் ஈடுபடுவதற்கும் வெளித்தரப்புகளுடனான சந்திப்புக்கும் மொழி ரீதியாகவும் அரசியல் அமைப்பு அறிவு சார்ந்தும் கஜேந்திரகுமாரின் உதவியும் ஆதரவும் சிறிதரனுக்கும் வேண்டியுள்ளது. ஆகவே ஒருவருக்கொருவர் உதவி – ஆதரவு என்ற அடிப்படையில் ஒரு நிழற் கூட்டில் இணைவதற்கு விரும்புகின்றனர். இதில் கூடுதலான விருப்பத்தைக் காட்டுவது சிறிதரனும் கஜேந்திரனும்தான்.
செல்வத்துக்கு ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் நெருக்கீடு இருப்பதால் அவர் மெதுமெதுவாகத்தான் இதில் இணைய முடியும். அல்லது ஏதோ ஒரு அளவு இருக்கும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய இந்த நகர்வின் சூட்சுமத்தை ரெலோ புரிந்து கொண்டதோ இல்லையோ, தமிழரசுக் கட்சி புரிந்துள்ளதாகவே தெரிகிறது. என்பதால்தான் அது உடனடியாகவே உசாரடைந்து, மத்திய குழுவைக் கூட்டி, இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிய தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, பேச்சுவார்த்தை ஏற்படுமாக இருந்தால் அதை எதிர்கொள்வதற்கான தயார்ப்பு, அதில் பங்கேற்கும் முறை, பங்கேற்போர் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களுக்காக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
ஒற்றை உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ள கஜேந்திரன், எட்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியைக் கட்டுப்படுத்த முடியும்? வழிப்படுத்த முடியும்? என்ற கேள்வியை தமிழரசுக் கட்சி எழுப்பியுள்ளது.
நியாயத்தின்படி தமிழரசுக் கட்சியின் இந்தக் கேள்வி ஏற்றுக் கொள்ளக் கூடியதே. என்பதால்தான் கஜேந்திரகுமார் இழுக்கின்ற பக்கமெல்லாம் இழுபடுவதற்குத் தாம் தயாரில்லை என்பதை நெற்றியில் அடித்ததைப்போல தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கஜேந்திரகுமாரின் சூதான – தந்திரோபாய நடவடிக்கைகளுக்கு ஒரு இறுக்கமான தடையைப் போட்டுள்ளது தமிழரசுக் கட்சி. கூடவே அந்தச் சூதை முதற்கட்டமாக அது முறியடித்துமுள்ளது. இதனால் அதிரடியாக இந்த விடயத்தில் தொடர் சந்திப்புகளுக்குத் திட்டமிட்டிருந்த கஜேந்திரகுமாரின் நிகழ்ச்சி நிரல் தடைப்பட்டுப்போயிருக்கிறது.
ஆனாலும் கஜேந்திரகுமார் ஓயவுமில்லை. பின்வாங்கவுமில்லை. தன்னுடைய அரசியற் கூட்டாளியுடன் இணைந்து தீவிர நிலைத் தமிழ்த்தேசியவாதத்தை முன்னெடுக்கும் முயற்சியைத் தொடர்கிறார். இதனுடைய வெளிப்பாடே சுதந்திர தினத்தை கஜேந்திரகுமாரும் சிறிதரனும் இணைந்து கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தியதும் கிளிநொச்சியில் ஊர்வலத்தை நடத்தியதுமாகும். இதன் மூலம் கிளிநொச்சியில் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை உறுதிப்படுத்திக் கொண்டார் சிறிதரன். அதாவது கஜேந்திரகுமாரைப் பயன்படுத்தித் தன்னுடைய செல்வாக்குப் பரப்பை உறுதியாக்கிக் கொள்கிறார் சிறிதரன். இது அவருடைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு வாய்ப்பாக அமையும் என்று சிறிதரனின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதாவது கஜேந்திரகுமாரைச் சிறிதரன் தந்திரோபாயமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என.
இப்படியே ஆளை ஆள் பயன்படுத்துவதும் பலப்படுத்துவதும் பாவிப்பதுமான ஒரு அரசியல் உறவு தமிழ்த்தேசியப் பரப்பில் உருவாகி வருகிறது. இது மக்களுக்கு எத்தகைய முன்னேற்றத்தையும் விடுதலையையும் அளிக்கும் என்பது கேள்வியே. அதைப்பற்றி இவர்கள் கவலைப்படப் போவதுமில்லை.
மெய்யாகவே மக்களுக்கான அரசியலாக, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியலாக இதனை முன்னெடுப்பதாக இருந்தால், தமிழ் பேசும் மக்களின் ஐக்கியம் என்ற அடிப்படையில் வடக்குக் கிழக்கு தழுவியதாகவும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாகவும் சிந்திக்க வேண்டும். அதற்கான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். விடுதலைப் புலிகளைத் தமது ஆதர்ச சக்தியாகவும் வழிகாட்டிகளாகவும் கொள்ளும் சிறிதரனும் கஜேந்திரகுமாரும் புலிகளின் முன்மாதிரிகள் எதையும் பின்பற்றுவதில்லை.குறிப்பாக மக்களுக்கான அரசியலை – சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. போராளிகளின் நலன்களை, மாவீரர் குடும்பங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்வதுமில்லை. சூழலைப் பாதுகாப்பது, வளப்படுத்துவதைப் பற்றிக் கூட சிந்திப்பதில்லை.
தமிழ்த்தேசிய அரசியலுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் தலைமை தாங்குவதற்கு ஆவல் கொள்ளும் கஜேந்திரகுமாரும் சிறிதரனும் அதற்கான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். தலைமைத்துவம் என்பது நான்கு அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு அரசோச்சுவதல்ல. அது மக்களுக்கான அரசியற் பணிகளிலிருந்து உருவாகி வருவதாகும். அதற்கான உழைப்பைச் செலுத்தியே அதனைப் பெற முடியும். அவ்வாறில்லாத எந்தத் தலைமைத்துவமும் நின்று பிடிக்காது. வெற்றியளிக்கவும் மாட்டாது.
கஜேந்திரன்களும் சிறிதரன்களும் அரசியலில் படிக்க வேண்டியதும் வரலாற்றிற் கற்றுக் கொள்ள வேண்டியதும் பலதுண்டு. செல்ல வேண்டிய தூரமும் அதிகமாகும்.
00