கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்னசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற மாகாண ஆசிரியர் பரீட்சையை எழுதி, நேர்முகத் தேர்வில் தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்குமிடையே இன்று (27) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, அங்கு வந்த பட்டதாரிகள் தங்களின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, அவர்களின் பிரதான கோரிக்கையாக, குறித்த தேர்வு பெறுபேறுகள் எதிர்கால ஆட்சேர்ப்புகளில் அடிப்படையாக பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆளுநர் இதற்குப் பதிலளிக்கும் போது, தேர்வு தொடர்பான நிரந்தர தீர்வுகளை தாம் வழங்க முடியாது என்று தெரிவித்ததுடன், அவர்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், இந்த நியமனங்களில் பல தரப்பினரும் ஆர்வமாக இருப்பதால், அனைவருக்கும் நியாயமான மற்றும் சமநிலையான முடிவு எடுக்கப்படும் என கூறினார்.
இதேவேளை, நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, மாகாண கல்விச் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து, இந்த மேன்முறையீட்டுக் குழுவிற்கு முறையாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல், ஆட்சேர்ப்பை எதிர்நோக்கிய பட்டதாரிகளின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஏற்ற தீர்வுகளை வகுப்பதற்கும் வழிவகுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.