வேலையில்லா பட்டதாரிகள் இன்று (26.01.2025) பல்வேறு இடங்களில் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால், இன்று மதியம் 12 மணியளவில் திருகோணமலையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இவ் ஊடக சந்திப்பின் போது, காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புகளை வழங்குமாறு, வடக்கு கிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம். ஐ. எம் புர்கான் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதிகளை அள்ளி வழங்கியதை போல வேலைவாய்ப்புக்களையும் வழங்குமாறு அவர் கூறியிருந்தார்.
“அரசாங்கத்தின் அசமந்தமான அணுகுமுறை காரணமாக, வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் எனவும், பெரும் பொருளாதார சிரமங்கள், ஈஸ்டர் தாக்குதல், டெங்கு, கொரோனா போன்ற சவால்களுக்கு மத்தியில், 4, 5 ஆண்டுகள் கடினமான கல்வியை நிறைவு செய்து சிறப்பு மற்றும் பொது பட்டங்களை பெற்றிருந்தாலும், தீர்வு எதுவும் கிடைக்காமல் துன்பத்திலே வாழ்ந்து வருவதாகவும், பட்டதாரிகளுக்கு ஏற்ப சரியான நடவடிக்கைகள் எடுக்காமல், தம்மைப் போன்ற பல இளைஞர்களின் வாக்குகளை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் மூலம் தமக்கு நிலையான தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்போது, மேலும் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர்களுக்காக முப்பதாயிரம் (30,000) வெற்றிடங்கள், கிராம சேவகர்களுக்காக 3000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதை பட்டதாரிகளுக்கு பரீட்சை ஏதும் இன்றி பொது நியமனங்கள் ஊடாக அரச துறையில் நியமனங்களை வழங்க வேண்டும் பல்வேறு பொருளாதார கஷ்டங்களுடன் திருமணம் முடித்த நிலையில் வாழும் தம்மை நிராகரிக்காது கற்ற கல்விக்கான பட்டத்துக்கு தீர்வை தரவேண்டும் எனவும், போட்டி பரீட்சை என்ற பெயரில் பரீட்சைக்கு முகங்கொடுக்க முடியாத கேள்விகளை எடுத்து தோல்வியை சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது எனவும் தெரிவித்திருந்தனர்.
தற்போது கற்கும் உயர்தர மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை வேலைவாய்ப்பு இல்லாமல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதல் உள்வாரி வெளிவாரி பட்டங்களுடன் பலர் பட்டதாரிகளாக தொழில் இன்றி அலைகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புதிய அரசாங்கத்தின் கீழ் பொதுவான நியமனங்களை தமக்கு வழங்க ஆளுநர்கள், துறைசார் அமைச்சுக்கள், புதிய ஜனாதிபதி போன்றோர்கள் மிக கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் இன்றைய ஊடக சந்திப்பிலின்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.