தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. இம்முறை பத்ம விருதுகள் பட்டியலில் 23 பெண்கள், 10 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.