மூதூர் கடலில் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிகழ்ந்த படகு விபத்துக்கு இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவை கண்டுள்ளது. 1993 ஜனவரி 25ம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து மூதூர் துறைமுகத்தை நோக்கி மாலை 3:05 மணியளவில் புறப்பட்ட ரிபிசி 117 எனும் இயந்திரப்படகு, கடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாதாள மலை எனப்படும் கடல் பகுதியில் மாலை 3:45 மணியளவில் கவிழ்ந்து மூழ்கியது.
இதன் போது படகில் பயணித்த 120 பேரில் 59 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்தனர். அவர்களில் 13 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டு, 46 பேரின் சடலங்கள் கடலில் நீரோடு மாயமானது. இந்த விபத்தில் மூதூரைச் சேர்ந்த 43 பேரும், தோப்பூரைச் சேர்ந்த 9 பேரும், சம்பூர் கட்டைபரிச்சானைச் சேர்ந்த 4 பேரும், பூநகரையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
அந்த நாள் மூதூர் மற்றும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்கள் சோகத்தில் மூழ்கிய நாள் ஆகும். இந்த விபத்து மூதூர் பிராந்தியத்தில் நினைவூட்டப்படும் மிகப்பெரிய மரணச் சம்பவமாகும்.