தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஜனாதிபதிஅதிபர் மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (ஜன.15) அதிகாலை நேரத்தில் குவிந்தனர். gல மணித்தியால இழுபறியை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கறுப்பு நிற எஸ்யூவி வாகனங்கள் சைரனை ஒலிக்க செய்தபடி ஜனாதிபதி மாளிகை வளாகத்தை விட்டு வெளியேறின. கடந்த மாதம் அந்த நாட்டில் இராணுவ சட்டத்தை அமல்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சியால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பையடுத்து யோல் பதவியில் இருந்து நாடாளுமன்றத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
ஆனால், இதை அந்த நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இறுதி செய்ய வேண்டும். அங்கு விசாரணை ஆரம்பித்துள்ளது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யோல் மரணதண்டனையை அல்லது ஆயுள் தண்டனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தச் சூழலில் அவரை கைது செய்ய இரண்டாவது முறையாக அதிகாரிகள் இன்று முயற்சித்தனர். அது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி யூன் சாக் யோலை கைது செய்தனர். இராணுவ சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகும் முதல் தென் கொரிய ஜனாதிபதி என யோல் அறியப்படுகிறார்.
தன்னை கைது செய்யும் முயற்சியை பல வாரங்களாக யோல் தடுத்து வந்தார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பில், ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்தார். கடந்த முறை அவரை கைது செய்ய மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அதை தொடர்ந்து, மாளிகையை சுற்றி முள்வேலிகள் உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
இன்று, ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த ஊழல் எதிர்ப்பு பிரிவினர், பின் பக்கம் வழியாக சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று, பெரும் இழுபறியின் பின் ஜனாதிபதியை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட யோலின் உரையை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. அதில், இரத்த களரியை தவிர்க்க, புலனாய்வாளர்களுக்கு ஒத்துழைக்க முடிவு செய்ததாக யோல் தெரிவித்துள்ளார்.
இறுதிவரை இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக போராடுவேன் என யூன் சாக் யோல் கடந்த மாதம் சொல்லி இருந்தார். சியோல் நகரில் உள்ள ஹன்னம்-டோங் இல்லத்தில் அவர் கடந்த சில வாரங்களாக தங்கி இருந்தார். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது நியாயம் என்றே சொல்லி இருந்தார். அதே நேரத்தில் இது தொடர்பான விசாரணைக்கு தானாக முன்வந்து யூன் சாக் யோல் ஆஜராவார் என அவரது தரப்பு வழக்கறிஞராக தெரிவித்தனர்.
யோல் விசாரணையில் மௌனம் காத்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரை தடுத்து வைக்க நாளை வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அதன் பின்னர் மற்றொரு பிடியாணையை நீதிமன்றத்தில் பெற்றே தடுத்து வைக்கலாம்.
யோலின் பதவி நீக்கம் தொடர்பான அரசியலமைப்பு நீதிமன்ற விசாரணையிலும் அவர் முன்னிலையாகவில்லை. இதையடுத்து வியாழக்கிழமைக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.