இன்றைய தினம் (15) நடைபெற்ற கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் பிரதேச மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
உள்ளூர் சமூகத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்மொழியப்பட்ட முக்கிய கோரிக்கைகளாக அமைந்த அவை மக்கள் நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவியாக அமையக்கூடியவாறு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில், கிண்ணியா மகளிர் கல்லூரி மற்றும் பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலைக்கு அருகிலுள்ள டெலிகொம் கோபுரத்தை மக்கள் செறிவு குறைந்த இடத்திற்கு மாற்றி, அந்த காணியை கிண்ணியா மகளிர் கல்லூரியின் அபிவிருத்திக்காக ஒதுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.
தொடர்ந்து, கச்சக்கொடுத்தீவில் வசிக்கும் மக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்கப்பெற வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில், அப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகதார பராமரிப்பு நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தக்கோரியும், ஆயிலடியில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து, அப்பகுதியில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தக்கோரியும் தனது கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
வெள்ளங்குளம் மக்களின் மருத்துவ சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வாரத்தில் இரண்டு நாட்கள் அப் பிரதேச சுகாதார நிலையத்தில் நடமாடும் வைத்திய சேவையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், அறுவடை காலத்தில் வயலுக்கு செல்லும் பாதைகள், குறிப்பாக வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ள பாதைகளை தற்காலிகமாக செப்பனிடுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளுக்கு தடையில்லாமல் மேற்கொள்ள வழிவகுக்கலாம் எனவும் கூறி தனது கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்த கோரிக்கைகள், பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால தீர்வுகளாக அவை உடனடியாக நிறைவேற்றப்பட்டால், மக்கள் நலனுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.