கேகாலை, தெரணியகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பின்னர், யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படும் 17 மற்றும் 19 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்குள்ளான குறித்த யுவதியுடன், சந்தேக நபர்களில் ஒருவருக்கு நீண்டகால காதல் தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பில் அறிந்த தாயார், தனது மகளை சில நாட்களுக்கு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடத்தல் சம்பவமானது, கடந்த 12ம் திகதி யுவதி மீண்டும் தாயாரின் வீட்டுக்கு வந்தபோது நிகழ்ந்ததுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பின்னர், யுவதியை கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
யுவதியின் தாயார், சம்பவத்திற்குப் பின்னர் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, உடனடியாக விசாரணைகள் தொடங்கப்பட்டு, குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.