வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவுக்கு கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அண்மையில் இலங்கை முல்லைத்தீவு கடலில் ரோஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றி தமக்கு அடைக்கலம் தருமாறு வருகை தந்த குறித்த படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்றது.
இந் நிலையில் அவர்களை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
குறித்த போராட்டத்தில் பங்கு பற்றிய வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியான்மாரில் பாதுகாப்பு இல்லை தமக்கு பாதுகாப்பு தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியான்மாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி இருந்தார்.
அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டிடம் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் அவர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்திற்கு வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ வருமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.