- ஆளுநரின் ரஜமஹா விகாரை விஜயம்
இன்றைய தினம் (13.01.2025) துருது பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இலங்கையின் மிகப் பழமையான பௌத்த விகாரைகளில் ஒன்றான வரலாற்றுப் பெருமைமிக்க சேருவில மங்கள ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தார்.
இந்த விசேட நாளில், ஆளுநர் சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு பௌத்த சமயத்தின் ஆன்மிக பாரம்பரியங்களை அனுசரித்தார். குறிப்பாக, விகாரையின் தலைமைக் துறவிகளுடன் நேரடியாக சந்தித்து, விகாரையின் கடந்தகால வரலாறுகள் மற்றும் தற்போதைய சமய நடவடிக்கைகள் பற்றிய மேலதிக விவரங்களை கேட்டறிந்துகொண்டார்.
பௌத்த சமயத்தில் ஓர் அமைதியான ஆன்மிக நாளாகக் கருதப்படும் துருது பௌர்ணமி நாளில் பௌத்த வழிபாடுகள் மற்றும் தர்மப் போதனைகளின் முக்கியத்துவத்தை ஆளுநர் தனது உரைகளில் வெளிப்படுத்தினார். இத்தகைய நிகழ்வுகள் மத நல்லிணக்கத்தை வளர்த்து, சமூக ஒற்றுமையை பலப்படுத்துவதில் உதவியாக இருக்கும் என்பதையும், சமய மரபுகளை பேணுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
- 64 மாணவர்களுக்கு உயர்தர கல்வி உதவி: ஆளுநரின் உறுதி மற்றும் சமூக பங்களிப்பு!
இந்த நிகழ்வில், விகாராதிபதி பூஜ்ய அளுதெனியே சுபோதி தேரர் தலைமையில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. சேருவில விகாரையின் வழிகாட்டுதலின் கீழ், சேருவில மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்கான முழுமையான கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாணவர்கள் உயிரியல், இணைந்த கணிதம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் கல்வி பயிலும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கல்விச் செயற்றிட்டம் விகாராதிபதி சுபோதி தேரரின் நேரடி மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கற்றுத்தரும் ஆசிரியர்களின் சம்பளங்களை விகாரை நிரந்தரமாக வழங்கி வருகின்றது.
ஆளுநர் இந்த மாணவர்களுடன் நேரடியாக சந்தித்து, அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினார். சேருவில மத்திய கல்லூரியில் உயர்தரப் பரீட்சைகளுக்கு மாணவர்கள் தோற்றுவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் எனவும், தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.
இந்த முயற்சி, மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு மத நிறுவனத்தின் பங்களிப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்துகிறது. ஆளுநரின் இந்த செயல், கல்வி மற்றும் சமய இவற்றின் சமூக பங்களிப்பை வெளிப்படுத்துகிறது.
- தோப்பூர் பிராந்திய மருத்துவமனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
இன்று (13.01.2025) தோப்பூர் பிராந்திய மருத்துவமனைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் ஆய்வு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, ஆளுநர் மருத்துவமனையின் தற்போதைய வசதிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மருத்துவமனை மேலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் பிற ஊழியர்களுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
மருத்துவமனையின் குறைகளை திருத்துவதற்கான தேவைகள், புதிய உபகரணங்கள் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் விழிப்புணர்வை வெளியிட்ட இவர், மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் சேவை தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதன்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய சிகிச்சை சேவைகளை உடனடியாக மற்றும் செயற்பாடுகள் திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கத்தின் முழு ஆதரவையும் வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்தார்.
- கிழக்கு மாகாண ஆளுநரின் வாகன ஆய்வு நடவடிக்கை
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் இன்று (13.01.2025) கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களின் நிலையை ஆய்வு செய்யும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாகாண சபையின் பல்வேறு அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் பயன்பாட்டை ஆய்வு செய்த அவர், பழுதடைந்த வாகனங்களைத் திருத்தி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வாகனங்களின் பராமரிப்பில் அக்கறை காட்டுவதன் அவசியத்தையும், மக்கள் சேவைகளுக்கு அவற்றை முழுமையாக பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேவையற்ற செலவுகளை குறைத்து, அரச வளங்களை சரியாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.