ஈழத்துப் பதிப்புத்துறைக்குகாத்திரமான பங்களிப்பை வழங்கிய டேவிட் லிகோரி உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஜன.13) காலமானார்.
யாழ்ப்பாண குடாநாட்டுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு அச்சுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவிய 1990களில் மீரா வெளியீடாக 28 வரையான நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
கோடிட்ட அப்பியாசப் புத்தக தாள்களில் அச்சிடப்பட்டு, மர புளொக்கில் பதிக்கப்பட்ட அட்டையுடன் இந்நூல்களை அவர் பதிப்பித்து சைக்கிளில் சென்று விநியோகித்து வந்துள்ளார். போர்க்கால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் நாவல்களை தனது சொந்தச் செலவில் பதிப்பித்த வகையில் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், து.வைத்திலிங்கம்,தாமரைச் செல்வி, கே.எஸ். ஆனந்தன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், கே.ஆர்.டேவிட், இயல்வாணன், பொன். கணேசமூர்த்தி, வளவை வளவன், ஓ.கே.குணநாதன், வாமதேவன், முருகு, இந்திரா பிரியதர்சினி முதலியோரின் சமகால நாவல்களை இவர் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார பலமற்ற எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் அவர் சமூக அக்கறையுடன் செய்த சேவை முக்கியமானது.
அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.