திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிடப்பட்டு பதாகை ஒன்று அமைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் எவ்வளவு நிலப்பரப்பு தொல்லியலுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது?, அதற்கான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா?, எதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை அமைக்கப்படுமா? என்கிற சந்தேகம் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.
இதேவேளை, தொல்லியல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விரைவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த வருடம் (28.12.2024) இரவோடு இரவாக குச்சவெளி பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் பதாகை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து (01.01.2025) அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையை சேர்ந்த தேசிய மக்கள் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, தமிழ் மக்கள் மற்றும் தமிழ் வாக்குகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவான நிலையிலும், அவருடைய ஆட்சியில் நடைபெறும் இத்தகைய பௌத்தமய நடவடிக்கைகள் குறித்து அவர் என்ன பதிலளிக்கபோகின்றார் என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.