திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள ஜபல் மலை (மூன்றாங் கட்டை மலை) பிரச்சனை, அப்பகுதியில் சமூக நியாயம் குறித்த கேள்விகளை எழுப்பும் மையப்பொருளாக மாறியுள்ளது.
இப்பகுதியில் வாழும் மக்களின் வரலாறையும் வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாகவே மூன்றாங் கட்டை மலைப்பகுதி அமைந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் இருந்த இடமாக இருந்த இக்கிராமமானது 2012ம் ஆண்டில், இம்மலை பௌத்த வழிபாட்டுத் தலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அப் பகுதி மக்கள் எந்த எதிர்ப்பையும் கூறாமல் புத்தர் சிலை வைக்க அனுமதித்தனர்.
இருந்த போதிலும், 2019ம் ஆண்டு பௌத்த மதகுருக்கள் மற்றும் அதிகாரிகள் எந்த முன்னறிவிப்புமின்றி மலையை நில அளவை திணைக்களத்தின் மூலம் பௌத்த புனித பூமியாக மாற்ற முயன்றனர்.
இன்று பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில் இம் மலை அடிவாரத்தில் வாழும் ஜின்னா நகர் மற்றும் இருதயபுரம் பகுதி மக்களின் விவசாய நிலங்கள் காணப்படுகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த மதகுருக்கள் விவசாயிகளை தங்கள் காணிகளில் பணிபுரிய மறுக்கும் வகையில் இடையூறுகளை விளைவித்தல், ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையால் மக்கள் அச்சுறுத்தப்படல், மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், விகாரை கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்தல் என பல இன்னல்களை எதிர்நோக்குவதாக இக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தம் பூர்வீக நிலங்களை பாதுகாக்க நினைப்பது அடிப்படை உரிமையே ஆகும். அது எந்த மதத்தையோ அல்லது இனத்தையோ குறைவாகக் கருதும் நடவடிக்கையாக இருக்க முடியாது என்பது அவர்களின் போராட்டத்திற்கான நியாயமாகவே விளங்குவதாக அவர்கள் கருதுகின்றனர்.
மலைப்பகுதியின் பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்லவும், நீதியுடன் நடந்து கொள்ள அதிகாரிகளையும், திணைக்களங்களையும் வலியுறுத்தக்கோரியும், இதற்கு நியாயமான தீர்வு வர வேண்டும் எனும் அடிப்படையில் தங்கள் அடிப்படை உரிமைக்காக நடத்தும் நடுவீதிப் போராட்டத்திற்கான ஆதரவு அளிக்க வேண்டியுள்ளனர்.