தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் உடல்நிலையில் சுகயீனம் இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலையை ஆராய்வதற்காக வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.
சிறைச்சாலைத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, துமிந்த சில்வாவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பதைக் கண்டறிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மருத்துவகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, எதிர்வரும் சில நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட மருத்துவக்குழு துமிந்த சில்வாவை பரிசோதித்து, அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கையை சிறைச்சாலை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், துமிந்த சில்வாவுக்கு தனியான கழிவறை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மறுக்கிறார்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் துமிந்த சில்வாவின் இருப்பிடத்தை சோதித்த போதும் தன்னிடம் கையடக்கத் தொலைபேசி போன்ற உபகரணங்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.