மகரம்: பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்று சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள்! உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்த வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 9இல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3ஆம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
18.05.2025 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2இல் ராகுவும், 8ஆம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். குடியிருப்புகளில் உள்ளவர்கள், அக்கம் பக்கத்தினரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். துப்புரவு பணியாளர்கள், பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
திருமண வயதை எட்டிய சகோதர, சகோதரிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக செயல்படுவர். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் ஏதேனும் இருந்தால், உடனடியாக அதை சரி செய்து கொள்ளவும். தாயாரின் கை, கால் வலிக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கப் பார்க்கவும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 6ஆம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்துக்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சில விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுக்கடுக்கான வேலைகளால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புடன் பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களது வாழ்க்கைத் தரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். மகன், மகள் படிப்பை முடித்துவிட்டு, பணிக்குச் செல்லத் தொடங்குவதால், பொருளாதாரம் மேம்படும்.
29.03.2025 முதல் சனிபகவான் 3ஆம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் உங்களின் புகழ், கவுரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். இக்காலகட்டத்தில் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். இசைக் கலைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வரும். புதுப் புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வெளிநாட்டு பயணம் ஏற்பாடாகும்.
வியாபாரிகளே! இதுவரை பக்கத்து கடைக் காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நஷ்டம் என தொடர் சிக்கல்கள் இருந்த நிலை மாறும். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கொட்டம் அடங்கும். உங்களின் ஆலோசனைக்கு தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றும் முயற்சியில் இறங்கலாம்.
உத்தியோகஸ்தர்களே! இதுவரை வீண் பழியால் மன உளைச்சலுக்குள்ளாகி தூக்கமிழந்து தவித்தீர்கள். மற்றவர்களின் வேலைகளை சேர்த்து பார்த்தும் நல்ல பெயர் கிடைக்காமல் இருந்தது. இனி அந்த அவலநிலை மாறும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
இந்த 2025ஆம் ஆண்டு சின்ன சின்ன எதிர்ப்புகளையும், எதிர்பார்ப்புகளில் தாமதத்தையும் தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: காளி அம்மனை நவமி திதிகளில் வழிபடுங்கள். எலுமிச்சை பழ மாலை சாற்றுங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்