தனுசு: சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப்போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள்! ஆனால் உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அதிகம் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. நீங்களும் மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 10இல் கேதுவும், 4ஆம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்சினை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலை சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
18.05.2025 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ஆம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ராகு 3ஆம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டும் முயற்சிகளில் இறங்குவீர்கள்.
உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்கவும். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக டென்ஷன், அலைச்சல் இருக்கும். வேற்று மொழி பேசுபவர்கள், வெளிநாட்டவர் மூலம் ஆதாயம் உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்துவிடவும். யாரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் குருபகவான் நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப் பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்கியம் தாமதமாகியதே என்ற வருத்தம் வேண்டாம். இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த – பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.
சனிபகவான் இந்த புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 3 வது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய சொத்தை விற்பீர்கள். 29.03.2025 முதல் சனிபகவான் 4ஆம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாருக்கு சற்றே உடல் நலக்குறைவு ஏற்படும். திடீரென பணப் பற்றாக்குறை வந்து நீங்கும்.
வியாபாரிகளே! வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிட் நோட்டீஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். பக்கத்து கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். புதிய பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி காணலாம்.
உத்தியோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சில நேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள்.
வேறு சில வாய்ப்புகளும் வரும். மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும்.
கணினித் துறையினரே! அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். சலுகைகள் அதிகரிக்கும்.
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: வராஹ அவதாரத்தை சனிக்கிழமையில் வணங்குங்கள். துளசி நட்டுப் பராமரியுங்கள். முதியவருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி கூடும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்–