மேஷம்: அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக் கொண்டவர்களே! உங்கள் 9வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டபடி, இப்போது உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
புத்தாண்டின் தொடக்கம் முதல் 17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12ஆம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள்.
18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது 5ஆம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். ராகு 11ஆம் வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். ஆனால் 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 3ஆம் வீட்டிலேயே அமர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
வருட தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பாதி பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
29.03.2025 முதல் சனிபகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் இக்காலக் கட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை.
வியாபாரிகளே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் இருந்த நிலை மாறும். இனி தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுக் கவும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னீச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி -இறக்குமதி, நீசப் பொருட்களால் ஆதாயமடை வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! உங்களை குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.
கணினி துறையினரே! இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்த நிலை மாறும். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
ஆகமொத்தம் இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளை ஏற்படுத்தி, கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினாலும், தன்னம்பிக்கையால் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்குங்கள். ஒளவையார் அருளிய அகவலை தினமும் படியுங்கள். எலுமிச்சை மரக்கன்று நட்டு பராமரியுங்கள். ஏழைப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்