கடகம்: ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றி, உங்கள் வாழ்க்கையிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். தம்பதிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.
17.05.2025 வரை உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9ஆம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். 18.05.2025 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டிலும், ராகு 8ஆம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
ஆண்டு பிறப்பு முதல் 13.05.2025 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களின் செல்வம், செல்வாக்கு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பதவிகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். 14.05.2025 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு.
இந்தாண்டு தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. 29.03.2025 முதல் சனிபகவான் 9ஆம் வீட்டில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் விலகும். தந்தையுடன் மனத்தாங்கல், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அஷ்டமத்தில் அகப்பட்டதை விட இந்த காலக்கட்டம் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.
வியாபாரிகளே! இதுவரை கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களை வெறுத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
கணினி துறையினரே! தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்துக்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.
இந்தப் புத்தாண்டு புதிய படிப்பினைகளை தருவதாகவும், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் கொஞ்சம் நெளிவு, சுளிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள். ஏழ்மையின் நிலையில் இருக்கும் மாணவிக்கு படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். முல்லைக் கொடி நடுங்கள். எதிலும் திருப்தி ஏற்படும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்