பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அந்தந்த மாகாணங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாக அவர் கருத்து தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 1,040 வேட்பாளர்கள் குறித்து பொலிஸாரிடம் தேர்தல் ஆணைக்குழு முறைப்பாடு அளித்துள்ளது. அவர்களில் 900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், பல அரசியல் கட்சிகள் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 6ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கால அவகாசத்துக்குள் அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியமைக்காக வழக்குத் தொடரப்படும் எனவும், எந்தவொரு வேட்பாளரும் மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள், செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 13 பேர் தொடர்பில் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.