கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சிய வளாகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எரிபொருள் பௌசர்களின் சீல்களை உடைக்காமல் எரிபொருளைத் திருடி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பெயரில் இரண்டு சாரதிகள், இரண்டு உதவியாளர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம வல்மில்ல மைத்திரி மாவத்தையில் வைத்து 70 லீற்றர் பெற்றோல் மற்றும் 80 லீற்றர் டீசல் அடங்கிய 7 பிளாஸ்ரிக் கொள்கலன்களுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எஸ்.சாந்தவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது எரிபொருள் பௌசர் நிறுத்தப்பட்டிருந்த நிலத்தில் எரிபொருள் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.